ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு காலக்கெடு நவம்பர் 17 வரை நீட்டிப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இரண்டு நாட்கள் நீட்டித்துள்ளது. இதன்படி, 10 அணிகளும் தங்களது பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலில் அறிவிக்கப்பட்ட நவம்பர் 15-ஆம் தேதி, இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அணிகள் தங்களது வீரர்கள் தேர்வு மற்றும் அணிக் கட்டமைப்பு குறித்து இறுதி முடிவுகளை எடுக்க கூடுதல் அவகாசம் கிடைத்துள்ளது.

இதற்கிடையே, 2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. ஏலத்திற்கான வீரர்கள் பதிவு நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 23-ஆம் தேதி நிறைவடைகிறது. அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களின் இறுதிப் பட்டியலை டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இறுதி ஏலப் பட்டியல் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
ஏற்கனவே டெல்லி கேபிடல்ஸ் அணி, ரிஷப் பண்ட்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலிருந்து மீண்டும் அணிக்குக் கொண்டுவந்துள்ளது. இதற்கு மாற்றாக குல்தீப் யாதவ் லக்னோ அணிக்குச் சென்றுள்ளார். மேலும், டி.நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வழங்கி, ஜீஷன் அன்சாரியை டெல்லி அணி பெற்றுள்ளது.
2028-ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பாக நடைபெறும் கடைசி மினி ஏலம் இதுவாகும் என்பதால், அணிகளின் வீரர்கள் தேர்வு குறித்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.




