தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை ரத்து!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட மூன்று மாத கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப் பொருட்களின் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், அவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் புதிய விதிகளை கொண்டு வந்தது.
இதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கனிம வளத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், முறையான அனுமதி பெற்று வெட்டி எடுக்கப்படும் கனிமங்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்றும், அவற்றை எந்த மாநிலத்தில் விற்பனை செய்வது என்பதைத் தீர்மானிக்க தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு கொண்டுவந்த விதித் திருத்தங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை எனக் கூறி அவற்றை ரத்து செய்தது.
மேலும், முறையான உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தமிழக அரசு தடை செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனால், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்வது தொடர்பான தடை நீக்கப்பட்டுள்ளது.




