ராமாயணா படத்திற்காக 3 ஆண்டுகள் உழைப்பு… ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சுமார் 10 முதல் 12 திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு பாடலை இறுதி செய்வதற்காக 13 வெவ்வேறு வெர்ஷன்களை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இசைக்காக கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாக கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) பேசிய ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ‘ராவண தாண்டவம்’ பாடலுக்கு மட்டும் 12 முதல் 13 வெவ்வேறு இசை வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னரே படக்குழுவினர் அனைவருக்கும் பிடித்தமான இறுதி இசை வடிவம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ராமாயணம் படத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டியிருந்ததால், பல முன்னணி இயக்குநர்களின் படங்கள் உட்பட சுமார் 10 முதல் 12 பட வாய்ப்புகளை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.
தனக்குப் பிடித்தமான மற்றும் தனது கலைத்திறனை மேம்படுத்தும் திரைப்படங்களில் மட்டுமே பணியாற்ற விரும்புவதாகக் குறிப்பிட்ட ரஹ்மான், இந்தப் படத்திற்காக மற்ற வாய்ப்புகளைத் தவிர்த்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தத் தகவல்கள் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளன.












