8 நாட்களில் ரூ.1,000 கோடியைத் தாண்டிய ‘ராமாயணா’ – உலகளவில் புதிய சாதனை!
Sakthibhavaniselvaraj
· 1 min read

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் உலகளாவிய வசூலில் ரூ.1,000 கோடி என்ற இமாலய இலக்கைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம், கடந்த நவம்பர் 5ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தொடர்ந்து வசூலில் முன்னேற்றம் கண்டு வருகிறது. வர்த்தக இணையதளமான Sacnilk வெளியிட்டுள்ள தகவலின்படி, படம் வெளியான 8 நாட்களில் உலகளவில் ரூ.1,033.55 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டும் ரூ.675.05 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் ரூ.358.50 கோடி வசூலும் கிடைத்துள்ளது.
இதன் மூலம் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்த 11-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை ‘ராமாயணா’ பெற்றுள்ளது. மேலும், மிகக் குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்டிய இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
முன்னதாக ‘புஷ்பா 2’ மற்றும் ‘துரந்தர் 2’ ஆகிய திரைப்படங்கள் 7 நாட்களில் இந்த இலக்கைக் கடந்திருந்தன.
சுமார் ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தில், ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2028ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












