ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசா பறிமுதல் – ஒருவர் கைது!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தனியார் கண்டெய்னர் முனையத்துக்குக் கொண்டு வரப்பட்ட சரக்குப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்பிலான 5 டன் கசகசாவை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த 20 அடி நீளமுள்ள சரக்குக் கண்டெய்னர் ஒன்று, தனியார் கண்டெய்னர் முனையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் கண்டெய்னரில் கால்சியம் கார்பனேட் எனப்படும் பதப்படுத்தப்பட்ட சுண்ணாம்புத் தூள் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், சரக்குகள் தொடர்பான ஆவணங்களில் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கண்டெய்னரைத் திறந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கண்டெய்னரின் முன்பகுதியில் கால்சியம் கார்பனேட் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அதன் பின்புறத்தில் சுமார் 5 டன் எடையுள்ள கசகசா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, கசகசா மூட்டைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கசகசா இறக்குமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், கூடுதல் இறக்குமதி வரியைத் தவிர்ப்பதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து, சுண்ணாம்புத் தூள் என்ற பெயரில் கசகசா இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












