ஸ்விக்கி, ஸொமாட்டோவுக்கு போட்டியாக ஃப்ளிப்கார்ட்! உணவு டெலிவரியில் புதிய அவதாரம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

ஆன்லைன் ஷாப்பிங் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃப்ளிப்கார்ட், தற்போது உணவு டெலிவரி சந்தையிலும் களமிறங்கத் தயாராகி வருகிறது. இதற்காக ‘Eat-in by Minutes’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஏற்கெனவே உணவு டெலிவரி துறையில் முன்னிலையில் உள்ள ஸ்விக்கி, ஸொமாட்டோ நிறுவனங்களுக்குப் போட்டி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
8,000 ஊழியர்களிடம் சோதனை!
டெக் க்ரஞ்ச் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஃப்ளிப்கார்ட் தனது புதிய உணவு டெலிவரி சேவையை முதற்கட்டமாகச் சில நூறு ஊழியர்களிடம் சோதனை செய்தது. தற்போது இந்தச் சோதனை 8,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூருவில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், உணவு ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக, தனது தளவாடப் பிரிவான எகார்ட் (Ekart) மூலம் தனி டெலிவரி ஊழியர்களையும் நிறுவனம் பயன்படுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவகங்களுக்கு குறைந்த கமிஷன்?
இந்தச் சேவைக்காக, அரசின் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் (ONDC) தளத்தில் இடம்பெற்றுள்ள உணவகங்களுடனும், நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ள உணவகங்களுடனும் ஃப்ளிப்கார்ட் இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோவுடன் ஒப்பிடும்போது உணவகங்களுக்கு குறைந்த கமிஷன் கட்டணத்தை வழங்கும் வாய்ப்பையும் ஃப்ளிப்கார்ட் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உணவகங்களின் செலவுகளைக் குறைத்து, புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க நிறுவனம் முயற்சி செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது அறிமுகமாகும்?
ஃப்ளிப்கார்ட்டின் புதிய உணவு டெலிவரி சேவை அக்டோபர் இறுதிக்குள் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், சேவையின் அறிமுகத் தேதி மற்றும் விரிவாக்கம் குறித்த முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
ஏற்கெனவே ‘Flipkart Minutes’ மூலம் விரைவான பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனம், தற்போது உணவு டெலிவரியிலும் கவனம் செலுத்துவது சந்தையில் புதிய போட்டியை உருவாக்கலாம். இந்தப் புதிய முயற்சி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலை மற்றும் சேவையை வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













