ஹைதராபாத் பாரத் மாநாடு ‘இந்தியாவுக்கு எதிரான மாநாடு’ – ராகுல் காந்தி மீது பாஜக கடும் குற்றச்சாட்டு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரத் மாநாட்டை முன்வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் ஐரோப்பிய சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஜியாகோமோ பிலிபெக்கும் கலந்து கொண்டார்.
மாநாட்டில் பேசிய அவர், இந்தியாவில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாகக் கூறியதுடன், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பேசினார். மேலும், ‘Vote Chor, Gaddi Chhod’ என்ற முழக்கத்தையும் எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, இந்த மாநாட்டை ‘இந்தியாவுக்கு எதிரான மாநாடு’ என விமர்சித்தார்.
மேலும், இந்தியாவின் ஜனநாயக அமைப்பையும் நாட்டின் நற்பெயரையும் சீர்குலைக்கும் வகையில் ராகுல் காந்தி வெளிநாட்டினருக்கு மேடை அமைத்துக் கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். வெளிநாட்டுப் பிரதிநிதி இந்தியாவின் தேர்தல் நடைமுறை குறித்து விமர்சித்தபோது, ராகுல் காந்தி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கைதட்டி வரவேற்றதாகவும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டிற்காகத் தமிழகமல்ல, தெலங்கானா அரசு பொதுமக்களின் வரிப்பணத்தை எவ்வளவு செலவிட்டது என்றும் பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிடுவதற்கு ராகுல் காந்தி ஆதரவளிக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் பாரத் மாநாட்டை மையமாகக் கொண்டு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது.




