தீபாவளி பண்டிகை எதிரொலி – புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பும் ரயில்கள்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு வருகின்றனர். இதனால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹௌரா மெயில் மற்றும் ஷாலிமர் விரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்கு மட்டுமே இருப்பதால், அவற்றில் பயணிகள் அளவுக்கு அதிகமாக ஏறி பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு பெட்டியில் சுமார் 100 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையில், தற்போது 200-க்கும் மேற்பட்டோர் நெரிசலில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. கதவுகள், படிக்கட்டுகள், லக்கேஜ் வைக்கும் இடங்கள் மற்றும் கழிப்பறை அருகில்கூட பயணிகள் நிற்பதால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் கிடைக்காத சிலர், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் ஏறுவதால் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பயணிகள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




