ரூ.400 கோடி பள்ளி அங்கீகார மோசடி.. 3 பேரிடம் கூட்டு விசாரணைக்கு போலீஸ் மனு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.400 கோடி வரை பணம் வசூலித்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 3 பேரையும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் இந்த வழக்கில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே 3 நாட்களும், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் 4 நாட்களும், ஓட்டுநர் சரவணன் ஒரு நாளும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மூவரையும் ஒன்றாக வைத்து விசாரிப்பதன் மூலம் பணம் எங்கு சென்றது, யார் யாருக்கு வழங்கப்பட்டது, இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மூவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தாக்கல் செய்துள்ள கூட்டு காவல் மனு மீதான நீதிமன்ற முடிவு இந்த வழக்கில் அடுத்தகட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.












