மதுரை காவல் நிலையத்தில் புகார்தாரர் மர்மமான முறையில் உ*ரிழப்பு! சிபி-சிஐடி விசாரணைக்கு உத்தரவு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தின் கழிவறையில் புகார் அளிக்க வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் உ*ரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் சரக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த நவம்பர் 3ஆம் தேதி தேனியிலிருந்து மதுரைக்கு ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் சென்றபோது, அவரது வாகனம் வாலந்தூர் கண்மாய் கரை அருகே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கு உதவுவதற்காக நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை பாலகிருஷ்ணன் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது காவல் ஆய்வாளர் அறைக்கு அருகிலுள்ள கழிவறைக்குச் சென்ற அவர், நீண்ட நேரமாக வெளியே வராததால் காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உ*ரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் பணியில் இருந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை பாரபட்சமற்ற முறையில் விசாரிப்பதற்காக சிபி-சிஐடிக்கு மாற்றுவதாக தெற்கு மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் உ*ரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இச்சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.












