வலுப்பெறும் ‘அக்வான்’ புயல்.. ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை! தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயல் தீவிரமடைந்து வருவதால் ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) நவம்பர் 18-ஆம் தேதி காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தப் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பர் 20-ஆம் தேதி நண்பகல் நெல்லூர் முதல் விசாகப்பட்டினம் இடையே ஆந்திரா மற்றும் ஏனாம் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அதன் வேகம் 120 கிலோமீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும், சில இடங்களில் மிக அதிக கனமழையும் பெய்யக்கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவும், பொதுமக்களுக்கு தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றவும், அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் நவம்பர் 18 முதல் 20-ஆம் தேதி வரை மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 19-ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.




