அடுத்த 10 ஆண்டுகளில் கொடிய நோய்களுக்கு தீர்வு கிடைக்குமா? AI மீது நம்பிக்கை தெரிவித்த Anthropic CEO!
Sakthibhavaniselvaraj
· 1 min read

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புற்றுநோய், இதய நோய், அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடேய் (Dario Amodei) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Anthropic நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தில் பேசிய அவர், தற்போது மருத்துவ உலகிற்கு பெரும் சவாலாக விளங்கும் புற்றுநோய், அல்சைமர், இதய நோய் மற்றும் மனநலப் பாதிப்புகள் போன்றவை அடுத்த பத்தாண்டுகளுக்குள் கடந்த காலத்தின் பிரச்சினைகளாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், AI தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தீர்வு காண முடியாமல் போராடி வரும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் அதிசயமான காலகட்டத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவ ஆராய்ச்சி, புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல், நோய்களுக்கான சிகிச்சை முறைகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் AI முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக Anthropic நிறுவனமும் மருந்து தயாரிப்பு மற்றும் உயிரியல் ஆராய்ச்சித் துறையில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.
இருப்பினும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ முடிவு அல்ல என்றும், புதிய மருந்துகள் மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால், AI தொழில்நுட்பத்தின் எதிர்கால மருத்துவப் பயன்பாடுகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.




