புதுச்சேரி பிரெஞ்சுப் பள்ளிக்கு 200 ஆண்டுகள் – இருநூற்றாண்டு விழா கொண்டாட்டம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பிரெஞ்சு சர்வதேசப் பள்ளியான Lycée Français International de Pondichéry தனது 200 ஆண்டுகால கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டாடி வருகிறது.
1826ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆளுநர் Eugène Desbassayns de Richemont என்பவரால் ‘Collège Royal de Pondichéry’ என்ற பெயரில் இந்தப் பள்ளி தொடங்கப்பட்டது. பிரான்ஸுக்கு வெளியே இன்றும் செயல்பட்டு வரும் பழமையான பிரெஞ்சுப் பள்ளிகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
இதன் இருநூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு வார காலத்திற்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், மாணவர்களின் படைப்புகள், பழைய மாணவர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். மேலும், அதிகாரப்பூர்வ விழாவில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாதோ, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் என். ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
ஆரம்பத்தில் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இந்தப் பள்ளியில், பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் உள்ளிட்ட இந்திய மொழிகளும் கற்பிக்கப்படத் தொடங்கின.
தற்போது மழலையர் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். இந்த இருநூற்றாண்டு விழா புதுச்சேரியின் கல்வி மற்றும் கலாச்சார வரலாற்றில் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.











