மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகவும் பிடித்திருந்தது – சச்சின்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைக்கேல்’ திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடிய சச்சினிடம், கடைசியாக திரையரங்கில் பார்த்த திரைப்படம் எது எனக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பார்த்ததாகவும், அது தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறினார்.

மேலும், சிறுவயது முதலே மைக்கேல் ஜாக்சனின் பாடல்களைக் கேட்டு வளர்ந்ததாகவும், அவரது இசை எப்போதும் தனக்குப் பிடித்தமான ஒன்று என்றும் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் ஆன்டோயின் ஃபுகுவா இயக்கியுள்ள இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் இசைப் பயணம், புகழின் உச்சத்தை அடைந்த விதம் மற்றும் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அவரது ஆரம்பகால இசைப் பயணம் முதல் உலகப் புகழ்பெற்ற கலைஞராக உருவெடுத்தது வரையிலான சம்பவங்கள் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் உறவினரான ஜாஃபர் ஜாக்சன், அவரது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயது மைக்கேலாக ஜூலியானோ வால்டி நடித்துள்ளார்.
மைக்கேல் ஜாக்சனின் இசையை விரும்பும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் கவனம் பெற்றுள்ள நிலையில், தற்போது சச்சின் தெண்டுல்கரின் பாராட்டும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது












