287 மதப் பெயர்கள் நீக்கம்.. Census 2027-ல் புதிய மாற்றம்! சாதி விவரங்களை எப்படி பதிவு செய்வார்கள்?
Sakthibhavaniselvaraj
· 1 min read

2027-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதம் மற்றும் சாதி விவரங்களைப் பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ‘Other’ பிரிவில் 287 மதப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றில் 200-க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு 76 பெயர்கள் மட்டுமே Predictive Text வசதியில் இடம்பெற்றுள்ளன.
நவம்பர் 16-ஆம் தேதி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் Census 2027 சுய கணக்கெடுப்பு இணையதளம் தொடங்கப்பட்டது. அதில் ‘Other’ மதப் பிரிவின் கீழ் ISKCON, சர்னா, ஷியா, சன்னி உள்ளிட்ட 287 பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. இந்தப் பட்டியல் தொடர்பாக கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது நீக்கப்பட்டு தற்போது 76 பெயர்கள் மட்டுமே தானாகப் பரிந்துரைக்கும் வசதியாக மாற்றப்பட்டுள்ளன.
இந்த பெயர்கள் தனித்தனி மதங்களாக அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்றும், மக்கள் தங்கள் மதத்தின் பெயரை உள்ளிடும்போது எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க உதவும் Predictive Text வசதி என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல்முறையாக அனைத்து சமூகங்களின் சாதி விவரங்களும் பதிவு செய்யப்பட உள்ளன. ஆனால், சாதி விவரங்களுக்கு முன்கூட்டியே பட்டியல் வழங்காமல், மக்கள் தங்கள் சாதியின் பெயரை நேரடியாக உள்ளிடும் Open-ended முறையைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மதப் பிரிவில் பெயர்கள் பரிந்துரைக்கப்படும் வசதி இருக்கும்போது, சாதி விவரங்களுக்கு ஏன் பட்டியல் வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. Census 2027-ல் மதம் மற்றும் சாதி விவரங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படும் என்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.












