மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி லாட்டரி பரிசு! ‘என் மகள் வந்த நேரம் மாறிவிட்டது’ – தந்தை நெகிழ்ச்சி!
Sakthibhavaniselvaraj
· 1 min read

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு பெண் குழந்தை பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள பரேட்டா பகுதியைச் சேர்ந்தவர் யுத்வீர் சிங். தச்சுத் தொழில் செய்து வரும் இவருக்கும், ஹர்மன் என்பவருக்கும் கடந்த 2024-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, கடந்த நவம்பர் 4-ஆம் தேதி லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
லாட்டரி சீட்டு வாங்கியபோது, மருத்துவச் செலவுகளுக்காக பணத்தைச் சேமிக்க வேண்டிய சூழலில் இதற்கு ஏன் செலவு செய்கிறீர்கள் என அவரது மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பமும் ஏற்கெனவே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தி வந்துள்ளது.
இதற்கிடையே, நவம்பர் 6-ஆம் தேதி யுத்வீர் சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மறுநாள் வெளியான பஞ்சாப் மாநில லாட்டரி முடிவில், அவர் வாங்கிய சீட்டுக்கு முதல் பரிசான ரூ.1.5 கோடி கிடைத்துள்ளது. இதனால் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
மேலும், குழந்தை பிறந்தபோது சில உறவினர்கள் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனது மகள் குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக நம்பும் யுத்வீர், அந்தக் குழந்தைக்கு ‘பர்கத்’ (Barkat) எனப் பெயரிட்டுள்ளார். இதற்கு செழிப்பு, வளம் என்று பொருள்.
கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு முதலில் குடும்பக் கடன்களை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை மகளின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகச் செலவிடப் போவதாக யுத்வீர் தெரிவித்துள்ளார்.












