பஞ்சாபில் 5,835 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பு! ரூ.1.08 கோடிக்கு மேல் அபராதம் விதிப்பு!
Sakthibhavaniselvaraj
· 1 min read

பஞ்சாப் மாநிலத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு வயல்களில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதுவரை மாநிலம் முழுவதும் உள்ள 23 மாவட்டங்களில் 5,835 பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) தெரிவித்துள்ளது.
இதில், 5,539 இடங்களில் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆய்வில் 2,442 இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 2,152 வழக்குகளில் சுற்றுச்சூழல் இழப்பீடாக மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.40 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயிர்க்கழிவுகளை எரித்தது தொடர்பாக 1,834 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் வருவாய்ப் பதிவேடுகளில் 2,015 இடங்களில் சிவப்பு குறியீடுகளும் (Red Entries) பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாட்டியாலா மாவட்டத்தில் மட்டும் 391 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பஞ்சாபில் மொத்தம் 32.87 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 98 சதவீத அறுவடைப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும், பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.












