ஹைதராபாத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் – ஹோட்டல், ரயில் நிலையத்திற்கு வெடிகுண*டு மிரட்டல்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

ஹைதராபாத் நகரில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகு*டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நவம்பர் 21ஆம் தேதி ஹைதராபாத் காவல்துறை ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், கச்சிகுடா ரயில் நிலையம் மற்றும் அங்குள்ள ஹோட்டல் டூரிஸ்ட் பிளாசா ஆகிய இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலைப் போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்றும், 300 பேர் வரை உயிரிழக்க நேரிடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, சந்தேகத்திற்குரிய இடங்களில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், வெடிபொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
முதற்கட்ட விசாரணையில், இந்த மிரட்டல் மின்னஞ்சல் தற்காலிக மின்னஞ்சல் முகவரி மற்றும் வெளிநாட்டு VPN மூலம் அனுப்பப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இதனால், மின்னஞ்சல் அனுப்பிய நபரை அடையாளம் காண சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பொதுமக்கள் வதந்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது பொருட்கள் தென்பட்டால் உடனடியாக 112 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




