நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்ட அதிர்வுகள்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

நேபாளத்தில் இன்று (நவம்பர் 24) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உள்ள லெலெப் (Lelep) பகுதியை மையமாகக் கொண்டு காலை 7.02 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் சில பகுதிகள் மட்டுமின்றி பூடான், வங்கதேசம் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, டார்ஜிலிங் உள்ளிட்ட வடக்கு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கிடையே, அசாமின் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் அதிகாலை 3.39 மணியளவில் 2.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது பூமிக்கு அடியில் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.




