உலக செஸ் சாம்பியன்ஷிப்: குகேஷ் – சிண்டாரோவ் மோதல் இன்று தொடக்கம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (நவம்பர் 24) தொடங்குகிறது. இதில் நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிண்டாரோவை எதிர்கொள்கிறார்.
இருவருக்கும் 20 வயது என்பதால், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிக இளம் வயதுடைய இரு வீரர்கள் மோதும் போட்டியாக இது அமைந்துள்ளது. மொத்தம் 14 கிளாசிக்கல் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை வெல்வார். இருவரும் சம புள்ளிகளைப் பெற்றால் டைபிரேக்கர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்குகிறது. இதில் குகேஷ் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடுகிறார். மேலும், முதல் 40 நகர்வுகளுக்கு முன்பாக இருவரின் ஒப்புதலுடன் டிரா செய்வதற்கும் அனுமதி இல்லை.
கடந்த 2024-ஆம் ஆண்டு சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், சமீபத்திய போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் இருந்து வருகிறார். மறுபுறம், சிண்டாரோவ் சிறப்பான ஆட்டத்திறனுடன் களமிறங்குகிறார். கேண்டிடேட்ஸ் தொடரில் முதல்முறையாகப் பங்கேற்றபோதே சாம்பியன் பட்டம் வென்று இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
தற்போதைய தரவரிசையில் குகேஷ் 26-ஆவது இடத்திலும், சிண்டாரோவ் 4-ஆவது இடத்திலும் உள்ளனர். இதுவரை இருவரும் நேருக்கு நேர் மோதிய மூன்று கிளாசிக்கல் ஆட்டங்களில் சிண்டாரோவ் இரண்டு வெற்றிகளையும், ஒரு ஆட்டத்தில் டிராவையும் பதிவு செய்துள்ளார். இதனால் இந்தப் போட்டி செஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




