தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு;8 மாநிலங்களுக்கு மூடுபனி எச்சரிக்கை!
Sakthibhavaniselvaraj
· 1 min read

தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் அடர்ந்த மூடுபனி நிலவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை!
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 24 முதல் 26ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும். மேலும், நவம்பர் 23 முதல் 27ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழையுடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.
கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் நவம்பர் 24 முதல் 27ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். கர்நாடகாவின் தெற்குப் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி!
மறுபுறம், அசாம், மேகாலயா, உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் அசாம், மேகாலயா பகுதிகளிலும், நவம்பர் 23 முதல் 25ஆம் தேதி வரை இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மூடுபனி நிலவ வாய்ப்புள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




