திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்: மலைக்கு கொண்டு செல்லப்பட்ட தீபக் கொப்பரை!
Sakthibhavaniselvaraj
· 1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று (நவம்பர் 24) மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது.
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா, இன்று 10-ஆம் நாளை எட்டியுள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக, மகா தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் பஞ்சலோகக் கொப்பரைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, பர்வதராஜ குல மரபைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் அதனைத் தோளில் சுமந்து மலை உச்சிக்குக் கொண்டு சென்றனர்.
சுமார் 5¾ அடி உயரமும், 310 கிலோ எடையும் கொண்ட இந்தக் கொப்பரை சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோரைக் குறிக்கும் வகையில் மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. இதில் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மேலும், மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால், 15,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள், ரயில்கள், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்த மகா தீப தரிசனத்தைக் காண பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.




