167 ஆண்டுகால கணிதப் புதிருக்கு AI மூலம் தீர்வு? எலான் மஸ்க் – AI நிபுணர் இடையே விவாதம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 167 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த கணிதத்தின் முக்கியப் புதிரான ‘ரீமான் கருதுகோளுக்கு’ (Riemann Hypothesis) AI உதவியுடன் தீர்வு கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Anthropic நிறுவனத்தின் கணிதவியலாளர் லெவென்ட் அல்போஜ் (Levent Alpöge), அந்நிறுவனத்தின் Claude AI உதவியுடன் இந்தக் கணிதப் பிரச்சினைக்கான நிரூபணத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். 1859ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட இந்தக் கருதுகோள், பகா எண்களின் (Prime Numbers) பரவல் தொடர்பான முக்கியமான கணிதப் பிரச்சினையாகும்.
இந்தச் சாதனை குறித்து கருத்து தெரிவித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ‘சூப்பர் இன்டெலிஜென்ஸ்’ (Superintelligence) எனப்படும் மனித அறிவாற்றலை விஞ்சும் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது புதிய தொழில்நுட்பப் புரட்சியின் தொடக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், AI துறையின் முன்னணி நிபுணரும், முன்னாள் மெட்டா தலைமை AI விஞ்ஞானியுமான யான் லெகுன் (Yann LeCun) இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். கணிதத்தில் இத்தகைய சாதனையைச் செய்த AI-யால், மனிதர்களைப் போல முழுமையான தானியங்கி வாகனங்களை இயக்கவும், எட்டு வயது குழந்தை செய்யக்கூடிய எளிய செயல்களைச் செய்யவும் இன்னும் முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் AI உண்மையிலேயே மனித அறிவாற்றலை விஞ்சிவிட்டதா அல்லது குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே சிறந்து விளங்குகிறதா என்ற விவாதம் உலகளவில் உருவாகியுள்ளது.




