திருப்போரூர் கோயில் நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் – குத்தகை ஒப்பந்தம் ரத்து!
Sakthibhavaniselvaraj
· 1 min read

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள செங்கண்மாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 2.30 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலத்தை நம்பிராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். ஆனால், குத்தகை ஒப்பந்த விதிகளை மீறி, கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி 50-க்கும் மேற்பட்ட கடைகளைக் கட்டியதுடன், அவற்றை மற்றவர்களுக்கு உள்வாடகைக்கு விட்டதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட நபரின் குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 2ஆம் தேதி கூடுதல் ஆணையர் ரத்னா தலைமையில் நில அளவையர்கள் மூலம் கோயில் நிலம் முழுமையாக அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
கோயிலுக்குச் சொந்தமான நிலத்தின் எல்லைகளைத் துல்லியமாகக் கண்டறிந்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். தமிழகத்தில் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.













