சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த 26 புதிய சாலைகள் – 33 பாலங்கள் அமைக்க திட்டம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், 26 புதிய சாலைகள் மற்றும் 33 பாலங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா – சீனா இடையிலான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுப் (LAC) பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்களின் நடமாட்டம் மற்றும் பாதுகாப்புப் பணிகளை எளிதாக்கும் நோக்கில் இந்த உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்காக, இந்தோ – சீனா எல்லைச் சாலைகள் திட்டத்தின் மூன்றாம் கட்டமான ICBR-III திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு (CCS) கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லையோரமாக 26 சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தோ – திபெத் எல்லைக் காவல் படையான ITBP, அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மற்றும் குருங் குமேய் ஆகிய மாவட்டங்களில் 15 நடைபாதை தொங்கு பாலங்கள் மற்றும் 18 மரப்பாலங்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மலைப்பகுதிகள் மற்றும் ஆறுகளைக் கடந்து பாதுகாப்புப் படையினர் செல்வது எளிதாகும்.
ஏற்கெனவே இரண்டு கட்டங்கள்!
கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் கட்டத்தில் 608 கி.மீ. நீளத்திற்கு 27 சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட இரண்டாம் கட்டத்தில் 683 கி.மீ. நீளத்திற்கு 32 சாலைகள் இடம்பெற்றன.
தற்போது மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் எல்லைப் பகுதிகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.












