நாளை திறக்கப்படுகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை! மண்டல கால பூஜைகள் தொடக்கம்!
Sakthibhavaniselvaraj
· 1 min read

சபரிமலை ஐயப்பன் கோவிலில் புகழ்பெற்ற மண்டல மற்றும் மகரவிளக்கு வழிபாட்டுக் காலத்தை முன்னிட்டு, நாளை (நவம்பர் 16) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களுக்கான பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி ஈ.டி. பிரசாத் நம்பூதிரி கோவில் நடையைத் திறந்து தீபம் ஏற்றுவார்.
தொடர்ந்து, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சபரிமலை மேல்சாந்தி சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி ஆகியோர் முறைப்படி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
நவம்பர் 17ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்திகள் கோவில் நடையைத் திறந்து பூஜைகளைத் தொடங்குவார்கள். இதன் மூலம் இந்த ஆண்டுக்கான 41 நாட்கள் மண்டல கால வழிபாடுகள் தொடங்குகின்றன.
இந்த ஆண்டு தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் தரிசனத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை மற்றும் அன்னதான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடப்பாண்டுக்கான மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 30ஆம் தேதி மகரவிளக்கு வழிபாட்டிற்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்பட உள்ளது.












